விழுப்புரம் : விழுப்புரத்தில், கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்தது தொடர்பாக உறவினர்கள் எஸ்.பி., அலுவலகத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தினர் மீது புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக நகர செயலாளர் ஜாபர்அலி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில தினங்களுக்கு முன் எனது சகோதரர் ஜாகீர் உசேன் மனைவி பர்ஜானா பானு அனுமதிக்கப்பட்டார். கடந்த 5ம் தேதி வலி வருவதற்காக, பணியில் இருந்த செவிலியர்கள் ஊசி மற்றும் மருந்து வழங்கினர்.
அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அவசர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். ஏன் என கேட்டபோது, டாக்டர்கள் இல்லை என தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வந்த பிறகும் டிஸ்சார்ஜ் விபரங்களை காலதாமதமாக வழங்கி மாலை 4:00 மணிக்கு அனுப்பி வைத்தனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டதும், டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை தாயின் வயிற்றுக்குள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததாலும், செவிலியர்களின் அலட்சியத்தினாலும் குழந்தை இறந்தது. எனவே, சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி., திருவண்ணாமலை தீப விழாவிற்கு சென்றதால், ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் மனுவைப் பெற்று, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.