உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஆர். கோவிந்தராஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழக தலைவர் வீரமணியின், 90வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வீரமணியை அதிகம் புகழ வேண்டும் என்பதற்காக, ஒரு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்...
அதாவது, எமர்ஜன்சி எனப்படும், அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த போது, ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த நேரத்தில், சிறைத் துறையினர் தன்னை கடுமையாகத் தாக்க முற்பட்ட போது, தன் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கிக் கொண்டார் என்று சொன்னது ஆச்சர்யமாக உள்ளது. இதுநாள் வரை, சிறையில் தன் மீது விழவிருந்த அடிகளை, சிட்டிபாபு என்பவர் தான் தாங்கிக் கொண்டார் என்று கூறி வந்தார் ஸ்டாலின்... இப்போது மாற்றிக் கூறியுள்ளார்.
![]()
|
ஸ்டாலின் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கிக் கொண்டார் என, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியே, எந்த இடத்திலும் சொன்னதாக தகவல் இல்லை. அதேபோல, தி.மு.க., பேச்சாளர்கள் யாரும் இதுபற்றி பேசியதாக செய்திகளும் வந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், வீரமணியே எங்கும், இந்தத் தகவலை சொன்னதாக தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, ஸ்டாலின் பேசி அமர்ந்த பின் பேசிய வீரமணியும், 'சிறையில் நாங்கள் அனைவரும், கடும் துன்பத்தை அனுபவித்தோம்' என்று தான் பொதுவாக பேசினாரே தவிர, ஸ்டாலின் கூறியதை வழி மொழியவில்லை; உண்மை என ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படி சிறையில், ஸ்டாலின் மீது விழவிருந்த அடிகளை, வீரமணி தாங்கியிருந்தால் இவ்வளவு காலமாக யாரும் ஏன் சொல்லவில்லை? இப்போது புதிய தகவலாக சொல்வானேன். ஒரு வேளை வீரமணியின், 90வது பிறந்த நாளில், நாட்டு மக்களுக்கு இதை சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலின் காத்திருந்தாரா என்பது, அவருக்கே வெளிச்சம்.
தி.க., தலைவர் வீரமணியை, அதிகம் புகழ வேண்டிய நிர்பந்தம் முதல்வருக்கு இருப்பதாலோ என்னவோ, அவரது, 90வது பிறந்த நாள் 'பம்பர்' பரிசாக, இப்படியொரு பொய்யான, 'அன்பளிப்பை' முகஸ்துதியாக தெரிவித்து இருக்கலாம்.
அதேநேரத்தில், பொய் சொல்வதிலும், மக்களை ஏமாற்றுவதிலும், தி.மு.க., தலைவர்கள் வல்லவர்கள் என்பதை, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.