சென்னை : கேபிள், குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பணிகளுக்காக பள்ளம் தோண்டினால், 'கால் பிபோர் யு டிக்' என்ற செயலியில் முன்பதிவு செய்வது அவசியம் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடிதம்
இதுகுறித்து, மத்திய தொலைதொடர்பு துறை செயலர் கே.ராஜாராமன், அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
நிலத்திற்கு கீழ் கேபிள்கள், குழாய்கள் என, பல்வேறு கட்டமைப்புகள்உள்ளன. தொலை தொடர்பு சேவையின் கீழ் பல லட்சம் கேபிள்கள் செல்கின்றன.
மின் கேபிள்கள், குடிநீர், 'காஸ்' குழாய்கள் பதிப்பு போன்ற, பல்வேறு காரணங்களுக்காக, சாலை மற்றும் சாலை ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன.
இதனால் ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 10 லட்சம் 'பைபர் நெட் கேபிள்' துண்டிக்கப்படுகிறது. இதனால், தொலைதொடர்பு சேவைகள் வழங்குவோருக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
வாடிக்கையாளர்களும் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், மின் கேபிள்கள், குழாய்கள் போன்ற, இதர சொத்துக்களும் சேதமடைகின்றன.
இதனால், மத்திய தொலைதொடர்பு துறை, 'கால் பிபோர் யு டிக்' என்ற மொபைல் போன் செயலியை உருவாக்கி உள்ளது.
தகவல்கள்
நாடு முழுதும் பல்வேறு பணிகளுக்காக, நிலத்தில் பள்ளம் தோண்டும் முன், இந்த செயலியில் பதிவு செய்வது கட்டாயம்.
எங்கு, எதற்காக பள்ளம் தோண்டப்பட உள்ளது, யார் தோண்டப் போகிறார், அவரது தொடர்பு எண்கள் உட்பட, அனைத்து தகவல்களும், அதில் இடம் பெற வேண்டும்.
இது தொடர்பாக, மாநில அரசு நோடல் அதிகாரியை நியமித்து, கண்காணிக்க வேண்டும். பள்ளம் தோண்டும் முகமைகள், அதற்கான அனுமதி கடிதம் மற்றும் இடத்தையும் செயலியில் பதிவேற்றம் செய்வது அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.