சென்னை: பெண் நிர்வாகியை ஆபாசமாக திட்டியதால், தமிழக பா.ஜ.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்ட சூர்யா, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நேற்று தெரிவித்தார்.
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவாவின் மகன் சூர்யா. தி.மு.க.,வில் இருந்த அவருக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்காததால், இந்தாண்டு துவக்கத்தில், தமிழக பா.ஜ.,வில் இணைந்தார்.
அக்கட்சியின் மாநில ஓ.பி.சி., பிரிவு பொதுச் செயலர் பொறுப்பு, சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக பா.ஜ., மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரண் உடன் மொபைல் போனில் பேசிய சூர்யா, அவரை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது.
இருவரிடமும் விசாரணை நடத்த, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை உத்தரவிட்டார்.
அக்குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சூர்யா, ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும், ஒரு தொண்டனாக கட்சி பணியாற்றலாம் எனவும், அண்ணாமலை அறிவித்தார்.
இந்நிலையில், 'பா.ஜ., உடனான என் உறவை நான் முடித்து கொள்கிறேன்' என, சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தையும் அவர், அண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார்.