சென்னை: ''அம்பேத்கர் தீவிர தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர்,'' என கவர்னர் ரவி புகழாரம் சூட்டினார்.
சென்னை, கிண்டி ராஜ்பவன் வளாகத்தில் ஏற்கனவே, 13 தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மலர் மரியாதை செலுத்தப்படுகிறது.
தற்போது, 14வதாக, அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை, தன் மனைவி லட்சுமியுடன் இணைந்து, கவர்னர் ரவி, நேற்று திறந்து வைத்தார்.
பின், அவர் பேசியதாவது: அம்பேத்கர் தீவிர தேசியவாதி; சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தார். அவர், நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர். ஜாதி, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்திற்காக அயராது உழைத்தார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் சிக்கலான பணியை சிறப்பாக மேற்கொண்டார். அவர், தன் ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக, பவுத்த மதத்தை தேர்ந்தெடுத்தார்.
அம்பேத்கரின் சிந்தனைகள், செயல்கள், தத்துவங்களை, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, கவர்னர் ரவி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், 'சமுதாயத்திற்கு அம்பேத்கரின் பங்கு' என்ற தலைப்பில், மாணவர்கள் தங்கள் கருத்துகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அம்பேத்கரின் சிலையை வடிவமைத்த சிற்பி கிஷோர் நாகப்பா; சிலையை வழங்கிய மாமன்னர் ஒண்டி வீரர் தேசிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, நினைவு பரிசை, கவர்னர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தலைமை செயலர் இறையன்பு, கவர்னரின் முதன்மை செயலர் ஆனந்தராவ் பாட்டீல், பல்வேறு பல்கலை துணைவேந்தர்கள், சட்டத்துறையை சேர்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.