துாத்துக்குடி: தென்னிந்திய திருச்சபை எனும் சி.எஸ்.ஐ., கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா. தெலுங்கானா மற்றும் இலங்கை உட்பட, 24 மண்டலங்கள் உள்ளன.
இந்த 24 பேராயர்களின் பிரதம பேராயராக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் ரசலம் செயல்படுகிறார். பாதிரியார்களின் ஓய்வு வயதை, 67ல் இருந்து 70 ஆக உயர்த்த, தர்மராஜ் ரசலம் திட்டமிட்டிருந்தார்.
அனுமதி பெறுவது தொடர்பான கவுன்சில் கூட்டம், துாத்துக்குடி துாய பேதுரு சர்ச்சில் நடப்பதாக இருந்தது. அதில் பங்கேற்க தர்மராஜ் ரசலம், கோவை பேராயரும் பிரதம பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர், காரில் வந்தனர்.
திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், காரை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். காரின் மீதும் கையால் தட்டி, கோஷம் எழுப்பினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து, பேராயர்கள் திரும்பிச் சென்றனர்.