சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை விரைவில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு, விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, சர்க்கரை ஆலை தலைவர் கானுார் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, ஆலை தலைமை பொறியாளர் ராம்குமார், பொறியாளர் செல்வேந்திரன், இயக்குனர்கள் சிவக்குமார், தங்கஆனந்தன், முத்துசாமி, மதியழகன், குணசேகரன், அரசு தரப்பு வழக்கறிஞர் பழனிமனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் வரவேற்றார். ஆலையின் மேலாண் இயக்குனர் சதீஷ், அரவை இயந்திரங்கள் சீரமைப்பு பணிகள், விவசாயிகளின் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினார்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், ஆதிமூலம், ஆண்டவர்செல்வம், டிராக்டர் ஓட்டுனர் சங்க நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், எதிர்பார்ப்பு குறித்தும் பேசினர்.
ஆண்டிமடம், கம்மாபுரம் , ஸ்ரீமுஷ்ணம், சோழத்தரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்திருந்த விவசாயிகள், புதிய ரக வீரிமுள்ள கரும்பு விதை கரணைகளை இலவசமாக வழங்க வேண்டும், கரும்பிற்கு செலுத்தப்படும் காப்பீட்டுக்கு பாதிப்பு காலங்களில் அதிகாரிகள் முயற்சி எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.