பெங்களூரு : ''ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பட்டதாரிகளுக்கு, நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வழங்கும் திட்டத்துக்கு, அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, 'ஏகல்வயா விருதை' கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று பேசியதாவது:
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற பட்டதாரிகளுக்கு, 'குரூப் பி' பணியும்; கீழ் நிலை விளையாட்டு பதக்கம் வென்றவர்களுக்கு 'குரூப் சி, 'குரூப் டி' பணியும் வழங்கப்படும்.
கர்நாடகா தவிர, வேறு எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கொள்கை இல்லை. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, 75 விளையாட்டு வீரர்கள் தத்தெடுக்கப்பட்டு, பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நான்கு வருட பயிற்சி, சிறந்த பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்யப்படும். இதற்காக, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இளம் விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து. கவனத்துடனும், கடின உழைப்புடனும் சாதித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் தலைவர்களும், நிர்வாகிகளும் மாநில அரசில் உள்ளனர். இதன் காரணமாக விளையாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை அமல்படுத்த முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
'ஏகல்வயா விருது' பெற்றவர்களுடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் நாராயண கவுடா. இடம்: விதான் சவுதா, பெங்களூரு.