பூ கட்சியில் விரிசல்
'கோல்டு பீல்டு' பூ கட்சியில் விரிசல் இருப்பதை வெளிக்காட்ட மூன்று தாலுகா கூட்டத்தில்ஒருமையில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கோட்டை 'முனி' தான் பிரிவினைவாதி என்பதை போட்டு உடைத்தார்களாம். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யார் என்னென்ன செய்து வருகின்றனர் என்பதை மேலிடம் வரை பற்ற வைத்தார்களாம்.
'கோல்டன்' வாய்ப்பு நழுவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்குதாம். இதுக்கு ஒருவர் மீது ஒருவர் குறை கூறி மன கசப்பை காட்டிட்டாங்களாம். புது புது வேட்பாளர்களை உருவாக்கி கோஷ்டி சிக்கலால் நெருக்கடி ஏற்படுத்தியது யாரென தெரிவித்திருக்காங்க.
கோஷ்டி உள்ளதை வெளிப்படையாக தெரிவிக்க நேற்று நடந்த சட்டப் பிதா நினைவுநாள் நிகழ்ச்சியில் இரு கோஷ்டிகள் தனித் தனியாக ஊர்வலம் நடத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.இந்த இரு கோஷ்டியும் உடைந்த கண்ணாடியாக இருக்காங்க. ஒட்ட வைக்க முடியாதாம்.
இந்த லட்சணத்தில் பூ கட்சியில் 'ரிபல்' வேட்பாளர் போட்டியிடத் தயாராயிட்டாங்களாம். இதை வெளிப்படையாக சொல்லாமல் ஊரையே புரிய வெச்சிருக்காங்க. சிலர் இப்பவே கை கட்சியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்காங்களாம்.
பூவுக்கு 'டபுள்' வேட்பாளர்
மகா மாரி நோய் தடுப்புக்குஇரவு, பகல் பாராது உழைத்த அங்கன்வாடி, சுகாதாரத் துறை ஊழியர்கள் 218 பேருக்கு பாராட்டு விழாவை பூ கட்சியில் ஒரு கோஷ்டி ஏற்பாடு செய்திருந்தாங்க.'மாஜி' அசெம்பிளி பூக்காரருக்கு எதிர்ப்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாங்களாம். விடுவாரா அவர்? யாரும் பங்கேற்காதபடி தடுக்க ஆக் ஷன் எடுக்க அவரின் பவரை காட்டி, உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்திருக்கிறார்.
உயர் அதிகாரிகளோ, தாலுகா திட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, யாராவது பணி நேரத்தில் விழாவில் பங்கேற்றால் அவர்கள் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெசேஜ் அனுப்பினர்.
தகவல் கிடைத்தவர்கள் மிரண்டுப் போய் விழாவில் பங்கேற்காமல் திரும்பி சென்று விட்டனர். அப்படியும் 50 சதவீதம் பேர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர். இதற்கான காரணத்தை தெரிந்து கொண்டார்கள்.
எதிர்க்கட்சியில் இதற்கு எதிர்ப்பு இல்லையாம். உட்கட்சியின் உச்சக்கட்ட வெறுப்புதான் காரணம் என தெரிந்தது. இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை 'முனி' ஆதரவாளர்கள், நகர, கிராம தலைவர்கள் பங்கேற்றனர். ஒருவேளை மாஜி அசெம்பிளி காரருக்கு மேலிடம் சீட் வழங்கினால் 'ரிபல் வேட்பாளர் ரெடி என்கிறாங்க. அப்படி என்றால் பூவுக்கு டபுள் வேட்பாளரோ?
இலை கொடி கம்பம் தப்புமா?
சூரியன் கட்சிக்காரர்களின் கொடி கம்பங்கள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாதிப்பு இல்லாத இடங்களில் உள்ளன. இவர்கள் சட்டசபைத் தேர்தலை பற்றி யோசிப்பதே இல்லை. தேர்தலில் செலவழிக்கும் எண்ணமும் யாருக்கும் இல்லை. அக்கட்சியின் தலைமையும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
ஆனால், இலை கட்சிக்காரர்கள் வெற்றி, தோல்விகளை கோல்டு சிட்டியில் பார்த்தவர்கள். தொடர்ந்து நான்கு சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் இப்பவும் போட்டியிட நாங்கள் தயார் என்கிறார்கள்.
மேலிடம் தேவையான நிதி உதவிகளை செய்றாங்க. இவர்களின் கொடி கம்பங்கள் நகரில் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகிறது.
சல்டானா சதுக்கத்தில் சாலை அகலப்படுத்தும் வேலைக்காக, அங்குள்ள இலை கட்சி நிறுவனர் வாத்தியார், அம்மா, சட்டப் பிதா சுவர் படங்களுடன் கொடி கம்பத்தையும் அகற்ற போறாங்களாம்.இடித்து தள்ள வேண்டிய பெரிய பெரிய கட்டடங்களை எல்லாம் விட்டு விட்டு, இலை கட்சி மீது பாய்வதற்கு எதிர்ப்பு ஏற்பட்டிருக்குது.
ஆயினும் கொடி கம்பத்தை பாதுகாக்க இலை காரர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வராங்க. மாற்று இடம் தேடுறாங்க.வேக தடையின்றி புல்லுக்கட்டு ஆட்டம்!
புல்லுக்கட்டு 'மாஜி' முதல்வர் பொன் விளைகிற மண்ணில் காலடி பதிக்கிறார். ஏற்கனவே கோல்டு சிட்டிக்கு இருமுறை வந்து சென்றவர். எனவே அவருக்கு தொகுதி முழு நிலவரமும் நன்றாகவே தெரியும்.
நகராட்சி திடலில் அவர் வருகையால் 'பூஸ்ட்' தரும் என அக்கட்சியினர் நம்புறாங்க. கிராம பகுதிகளில் விவசாயிகள் எல்லாம் புல்லுக்கட்டுக்கு சாதகமாக இருக்காங்களாம். 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமக்கு சாதகமாக்க 'டே அண்ட் நைட்' ஒர்க் நடக்குதாம். கோலார் மாவட்டத்தையே புல்லுக்கட்டின் கோட்டையாக்க போறாங்களாம்.
ஏற்கனவே, ப.பேட்டை, முல்பாகல், சீனிவாசப்பூர், கோலார், புல்லுக்கட்டுக்கு சாதகமாக இருக்குதாம். கோல்டு சிட்டியையும் 'வெற்றி' லிஸ்ட்டில் கொண்டு வர வியூகம் அமைத்திருக்காங்களாம்.
ஆனாலும் இது பகல் கனவு என்கிறது அரசியல் வட்டாரம். தொய்வில் இருந்தபுல்லுக்கட்டுக்கு கொழுத்த ஆடு கிடைத்திருக்கிற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குதாம்.
கை, பூ கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை பண 'மேக்னடிக்' வித்தையால் இழுக்கும் வேலையை தொடங்கிட்டாங்களாமே. அரசியல் கட்சிகளில் சமமான போட்டியாளராக புல்லுக்கட்டு புகுந்திருப்பதால் இதுவரை வெற்றி மமதையில் நகர் வலம் வந்தவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட நேர்ந்திருக்குது. உஷார் நடவடிக்கையில் இப்போதே குதிக்க வச்சிருக்கு!