புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தி.மு.க.,வினரும், பா.ஜ.,வினரும் போட்டி போட்டு, கவர்னர் பற்றி 'பிளக்ஸ் பேனர்' வைத்துள்ளனர்.
தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஆனால் பா.ஜ.,வினர், கவர்னருக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த கருத்து மோதல்கள், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டையை சேர்ந்தவரும், தி.மு.க., - எம்.பி.,யுமான அப்துல்லா, நகரின் பல்வேறு பகுதிகளில், தமிழக அரசின் 21 சட்ட மசோதாக்களை பட்டியலிட்டு, அதில், கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பதைக் கண்டித்து, பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக, அவரது சமூக வலைதளம் பக்கத்திலும், கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடியாக, பா.ஜ.,வினர், கவர்னருக்கு ஆதரவாகவும், எம்.பி., அப்துல்லாவின் செயல்பாடுகளை விமர்சித்தும், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.