வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 56 அரசு ஊழியர்களுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. அன்றிலிருந்து 2022 ஜூலை வரை, ஐந்து காஷ்மீரி பண்டிட்கள், 16 ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட 118 அப்பாவி பொதுமக்கள்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை, மத்திய அரசு பார்லியில் தெரிவித்தது.
இந்நிலையில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீர்பண்டிட்கள் அச்சம் அடைந்தனர். தங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும்படி வலியுறுத்தி, ஜம்முவில் உள்ள மறுவாழ்வு கமிஷனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()
|
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் உள்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், துணை ராணுவ படையினர், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், போலீசார் பங்கேற்றனர். பயங்கரவாதிகள், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 56 அரசு ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் மிரட்டலை ஒடுக்குவது குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
காஷ்மீரில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. ஸ்ரீநகரில் நடப்பாண்டின் மிக அதிகபட்ச குளிராக, 'மைனஸ் 3.4 டிகிரி செல்ஷியஸ்' குளிர் நேற்று முன்தினம் பதிவானது. வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள 'ஸ்கீ ரிசார்ட்' என்ற இடத்தில் நேற்று மைனஸ் 3.2 டிகிரி செல்ஷியஸ் குளிர் பதிவானது.தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்கமில், அமர்நாத் யாத்திரை செல்பவர்களின் முகாம் உள்ளது. இங்கு நேற்று மைனஸ் 2.2 டிகிரி செல்ஷியஸ் குளிர் பதிவானது.