புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், வரும், ௧௧ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., புதிய 'சம்மன்' அனுப்பி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இவரது மகள் கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணைக்கு நேற்று ஆஜராகும்படி, கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் இருப்பதால், 11 - 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தும்படி, கவிதா கோரியிருந்தார்.
இதையடுத்து, வரும் 11ம் தேதி காலை 11:௦௦ மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., தரப்பில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள கவிதாவின் வீட்டிலேயே இந்த விசாரணை நடத்தப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.