பெலகாவி: கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை முற்றுகிறது. பெலகாவி மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் பஸ், லாரி, கார் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சியும்; மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு - பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கின்றன.
மஹாராஷ்டிராவை ஒட்டியுள்ள கர்நாடகாவின் பெலகாவி தங்களுக்கு சொந்தம் என அம்மாநிலம் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால், பல ஆண்டுகளாகவே இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது.
பதற்றம்
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஆண்டுதோறும்,நவம்பர் 1ம் தேதி 'கர்நாடக ராஜ்யோத்சவா' எனப்படும் கர்நாடக மாநிலம் உதயமான நாளையொட்டி, பெலகாவியில் பதற்றம் நிலவும்.
இந்த ஆண்டும், மஹாராஷ்டிராவுக்கு சென்ற கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மீது, அம்மாநிலத்தில் சிலர் கற்களை வீசினர். இதனால், இரு மாநில எல்லைகளில் பரஸ்பரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக, மஹா., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் பெலகாவியில் நேற்று ஆய்வு மேற்கொள்ள வருவதாக அறிவித்ததும், பதற்றம் இன்னும் கூடியது.
'அவர்களை கர்நாடகாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்' என, பெலகாவி கலெக்டர் நிதேஷ் பாட்டீல் நேற்று முன்தினம் தெரிவித்தார். எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
'மஹா., அமைச்சர்களை உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது' என்பதை வலியுறுத்தி, கர்நாடக ரக் ஷனா வேதிகே அமைப்பினர், 400க்கும் அதிகமான வாகனங்களில், பெலகாவிக்கு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
பெலகாவியில் உள்ள ஹிரேபாகேவாடியில் மஹா., பதிவெண் கொண்ட லாரிகள், கார்கள் மீது கற்கள் வீசி தாக்கினர். மஹா., அமைச்சர் படங்களும் எரிக்கப்பட்டன.
![]()
|
'நோட்டீஸ்'
இதற்கிடையே, மஹா., அமைச்சர்களை பெலகாவியில் நுழைய அனுமதிக்கும்படி, மஹாராஷ்டிரா ஏகிகரன் சமிதி கட்சியினர், கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதே போல, மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தொண்டர்கள், கர்நாடக பஸ்கள் மீது கறுப்பு மை வீசி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மேலும், 'கர்நாடகாவுடன் இணைவோம்' என அறிவித்த தங்களது எல்லையோர கிராம பிரமுகர்களுக்கு மஹா., அரசு'நோட்டீஸ்'வழங்கியது.
இரு மாநிலங்களிலும் பதற்றம் அதிகரித்த நிலையில், பெலகாவிக்கு வருவதை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாக மஹா., அமைச்சர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
இரு மாநில எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சட்டபோராட்டத்தில் கர்நாடகா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
எல்லைப் பிரச்னையை உருவாக்கியதே மஹாராஷ்டிரா தான். எல்லையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எல்லை பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் பொறுமையை இழக்க வேண்டியிருக்கும்.
- சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா.
மஹாராஷ்டிரா அமைச்சர்கள் பெங்களூருக்கு வரட்டும். எங்களால் தக்க பதிலடி கொடுக்க முடியும். பெலகாவியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அது கர்நாடகாவுக்குத்தான் சொந்தம்.
- அரக ஞானேந்திரா, உள்துறை அமைச்சர், கர்நாடகா
பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் தொலைபேசி வாயிலாக பேசி கண்டனம் தெரிவித்தார். வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு, பொம்மையும் தங்கள் மாநில வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.நேற்றிரவு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பொம்மையுடன் போனில் பேசினார். அப்போது, 'இரு மாநில எல்லையில் அமைதி, ஒற்றுமை நிலவ நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.