சென்னை: நடிகர் யோகிபாபு நடித்த சினிமா தொடர்பாக, விருகம்பாக்கத்தில் சினிமா விநியோக நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரை கடத்தி பணம் பறித்த வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, விருகம்பாக்கம் சாலிகிராமத்தை சேர்ந்தவர் மதுராஜ், 39. விருகம்பாக்கம் ஏ.வி.எம்., அவென்யூ, இரண்டாவது தெருவில் சினிமா விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு, போரூரை சேர்ந்த கோபி, 37, மற்றும் பென்சர், 33, ஆகியோர் பணி செய்து வந்தனர்.
நடிகர் யோகி பாபு நடித்த, 'ஷூ' என்ற திரைப்படத்தை, அக்., 14ல் தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமத்திற்காகவும், 'டிவி' வெளியீட்டு உரிமத்திற்காகவும் பட தயாரிப்பாளரான கார்த்திக் என்பவரிடமிருந்து, 1.10 கோடி ரூபாய்க்கு, மதுராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதில், 17 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்த நிலையில், மீதி தொகையான 98 லட்சம் ரூபாயை இரண்டு தவணையாக கொடுப்பதாக கூறியிருந்தார்; தவணைத் தொகை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதுராஜ் அலுவலகத்திற்கு வந்த, 10 பேர் மர்ம கும்பல், கோபி மற்றும் பென்சரை சரமாரியாக தாக்கி, காரில் கடத்திச் சென்றது. தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்துத் தாக்கியது.
பின், அவர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் பறித்து கொண்டு, இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டது.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மதுராஜ் புகார் அளித்தார்.
இதன்படி, கடத்தலில் ஈடுபட்டதாக, செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் வினோத் குமார், 36 , வண்டலூரை சேர்ந்த நாகராஜ், 42, வினோத்குமார், 36, பிரசாந்த், 23, பாஸ்கர், 22, ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை, தீவிரமாக தேடி வருகின்றனர்.