சென்னை : ரிசர்வ் வங்கி சான்றிதழ் உட்பட, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து, பண மோசடிக்கு உடந்தையாக இருக்கும் முக்கிய குற்றவாளி, டில்லியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
சென்னை, திருமுல்லைவாயலை சேர்ந்தவர் சந்திரபோஸ், 39.
இவர், சென்னை உட்பட ஒன்பது இடங்களில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று இருப்பதுபோல, போலியாக, ஊரக மற்றும் வேளாண் வங்கிகளை நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்தார்.
இந்த வங்கியில், அதிகாரிகளை நியமிக்க பலரிடம், தலா ஏழு லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளார்.
இவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், நவ.,8ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்; குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
சந்திரபோஸ் செய்த மோசடி, தமிழகத்திற்கு புதிது.
இதன் பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ். சிறுவனாக இருக்கும்போது, இவரது குடும்பம் நுங்கம்பாக்கம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. தற்போது, திருமுல்லைவாயலில் வசிக்கின்றனர்.
சந்திரபோஸ், கனடாவில் படித்துள்ளார். அப்போது, போலியாக வங்கி நடத்தி, பண மோசடி செய்ய முடிவு செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்ததும், போலி ஆவணம் தயாரிக்கும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, டில்லியில் பதுங்கி இருக்கும், போலி ஆவண தயாரிப்பு கும்பல் தலைவன் பிரகாஷின் நெருங்கிய நட்பு வட்டத்தில், சந்திர போஸ் இணைந்துள்ளார்.
ஊரக மற்றும் வேளாண் வங்கி நடத்த, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது போல, பிரகாஷ் தான் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். இவர் பதுங்கி இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது; விரைவில் சிக்குவார்.
இவர் தான், சந்திரபோஸ் நடத்திய மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் என, தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம், சந்திரபோஸ், 50 லட்சம் ரூபாய் வாங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எதற்காக, அந்த பெண் பணம் தர வேண்டும்; இந்த மோசடிக்கு அவரும் உடந்தையா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.