மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோவிலில் நடந்த கார்த்திகை தீப விழாவில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையில், மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. பெரிய பித்தளை கொப்பரையில், 108 லிட்டர் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றப்பட்டது. 400 மீட்டர் காடா துணியில் திரி செய்யப்பட்டது. மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.