சென்னை : ''அரசு நிர்ணயம் செய்ததைவிட, அதிக விலைக்கு மது வகைகளை விற்ற, 852 ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்,'' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:
'டாஸ்மாக்' கடைகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, கூடுதல் விலை வைத்து விற்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளில், அதிக விலைக்கு விற்பனை செய்த, 1,970 ஊழியர்கள், பணிபுரியும் கடைகளில் இருந்து, விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதிக விலைக்கு மது விற்ற ஊழியர்களிடம் இருந்து, 4.61 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தவறுகள் செய்த, 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சட்ட விரோதமாக பார் நடத்தியதாக, 798 வழக்குகள் பதிந்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.