ஜகார்த்தா: கம்யூனிசத்தை பரப்பினால் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, அதிக மக்கள் தொகையில் உலகின் நான்காவது பெரிய நாடாக உள்ளது. அதுபோல் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒப்புதல்
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்த நாட்டில், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
''அதிபர் ஜோகோ விடோடாவின் ஒப்புதலுக்குப் பிறகு இது சட்டமாகும். இருப்பினும் சட்ட விதிகள் தொடர்பான நடைமுறைகள் வகுக்கப்பட உள்ளதால், நடைமுறைக்கு வருவதற்கு மூன்று ஆண்டுகளாகும்,'' என, அந்த நாட்டின் சட்டம் மற்றும் மனித உரிமைத் துறை இணையமைச்சர் எட்வர்ட் ஹிராயிஜ் கூறி உள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பல சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் முக்கிய அம்சங்கள்:
* கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக பார்க்கப்படும். இதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதன்பின், ஆறு மாதங்கள் சீர்திருத்த முகாமில் இருக்க வேண்டும்
* இந்த விதிமுறை இந்தோனேஷிய மக்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டவருக்கும் பொருந்தும்
* அதிபர், துணை அதிபர், அரசு அமைப்புகள், தேசிய சின்னங்களை அவமதித்தால், மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்
* கருக்கலைப்பு சட்டவிரோதமாகும். பெண்ணின் உயிருக்கு ஆபத்து மற்றும் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும்
![]()
|
மரண தண்டனை
* கடும் எதிர்ப்புகளை மீறி, மரண தண்டனையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது இறுதி வாய்ப்பாகவே பயன்படுத்தப்படும்.
குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். இதில் அவருடைய நடத்தையின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படும் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்
* ஓரினச் சேர்க்கை குற்றமாக பார்க்கப்படாது
* மததுவேஷத்தில் ஈடுபட்டால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை தொடரும். அதே நேரத்தில், இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஹிந்து, புத்தம், கன்பூசியம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன
* மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கொள்கையை பின்பற்றும் அமைப்புகளுடன் தொடர்புள்ளோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
* கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பரப்புவோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.