புதுடில்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், 'பொருளாதார கொள்கை என்பதால் நீதிமன்றம் தலையிடும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
அதே நேரத்தில் அரசு எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படுவதை கையைக் கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, ௨௦௧௬ல் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை, நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்டதாவது:
நாட்டின் நலன் கருதி, பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இதை செயல்படுத்துவதில் சில இடர்பாடுகள் இருந்தன. ஆனால், அவை உடனடியாக சீர் செய்யப்பட்டன. மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது, மத்திய அரசின் பொருளாதார கொள்கை என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
![]()
|
இதையடுத்து அமர்வு கூறியதாவது: நாட்டின் நலனுக்காக மத்திய அரசு சில கொள்கை முடிவுகளை எடுக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் இதை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகளில் நீதிமன்றங்களால் தலையிட முடியும். பொருளாதார கொள்கை என்பதற்காக எங்களை கட்டிப் போட முடியாது.
அரசின் முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விதங்களை கைகளைக் கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. இதில் நீதிமன்றம் தலையிட முடியும். இவ்வாறு அமர்வு கூறியது. விசாரணை இன்றும் தொடர்கிறது.