வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அவிநாசி: மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்கும் கானுார் தர்காவில் நேற்று அகல் விளக்கு ஏற்றி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட கானுார் கிராமத்தில், ஹஜ்ரத் முஹம்மத் ஷா வலியுல்லா தர்கா அமைந்துள்ளது. நுாற்றாண்டு புகழ்வாய்ந்த இந்த தர்காவில், ஹிந்து, இஸ்லாமிய மக்கள், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவின் போது, தர்காவிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, தீபத்திருநாளான நேற்று, இஸ்லாமியரும், ஹிந்து மக்களும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்தனர்; தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு தர்காவில் தீப வழிபாடு நடக்க உள்ளது.

தர்கா ஓதுவார் சம்சுதீன் கூறுகையில், ''இங்கு அனைத்து மக்களும், ஜாதி, மத வேறுபாடு பாராமல் வழிபட்டு வருகின்றனர். அவிநாசி மட்டுமின்றி, பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, ஹிந்து மக்கள் வந்து அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவது காலம் காலமாக நடக்கிறது,'' என்றார்.