வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலுார்: தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மங்கல தேவி கண்ணகி திருக்கோவிலை ஹிந்து சமய அறநிலைத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக-ம் - கேரள எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் தமிழக வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்வதற்கு தமிழக வனப்பகுதி வழியாக லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து, 6.6 கி.மீ., வனப்பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளி, கொக்கரகண்டம் வழியாக, 14 கி.மீ.,க்கு ஜீப் செல்லும் பாதை உள்ளது.

கோவிலுக்கு நடந்து செல்ல முடியாதவர்கள் கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையை பயன்படுத்துகின்றனர். விழா நடப்பதற்கு முன் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை தேக்கடியில் நடத்தி, அதில் எடுக்கும் முடிவுகளின்படி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை பயன்படுத்தி கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து வந்தது. மூன்று நாட்கள் திருவிழா நடந்து வந்ததை ஒரு நாளாக குறைத்ததுடன், கோவிலில் தரிசனம் செய்யும் நேரத்தை, 10 மணியில் இருந்து 6 மணி நேரமாக குறைத்தது.
கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கோவிலுக்குச் சென்று வந்தனர். தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் பாதை அமைக்கப்பட்டால், சுதந்திரமாக வழிபடலாம் என, தமிழக பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை தற்போது ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பு செய்துள்ளது.