திருச்சி : திருச்சி மலைக்கோட்டை கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தாயுமானவர் சுவாமி கோவில் உள்ளது. சுவாமி சுயம்புவாக எழுந்தருளிய இக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.
அதன் பின் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான 300 மீட்டர் நீள பருத்தி இழைகளால் பிரம்மாண்டமான திரி தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திரி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கொப்பரையில் வைக்கப்பட்டது.
அதில் 900 லிட்டர் நெய் இலுப்ப எண்ணெய் நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைக்கப்பட்டது.
கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
பஞ்ச மூர்த்திகள் அனைவரும் மலை உச்சிக்கு சென்று எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் உள்ள கொப்பரையில் திருகார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரியும் இந்த மஹா தீபத்தை மலை கோட்டையை சுற்றி 5 கி.மீ.யில் உள்ள மக்கள் தரிசிக்க முடியும்.