பாகூர் : புதுச்சேரியில் கள அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள், குடியிருப்புபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ மாணவியர் ஊரக விவசாயம் மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு அங்கமாக இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கள அனுபவ பயிற்சிபெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக,பாகூரை மையமாக கொண்டிருக்கும் மாணவர்கள் ஆர்த்தி, வேல்முருகன், பிரியதர்ஷினி, அகிலா, சாருமதி ஆகியோர், குடியிருப்புபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் "உலக மண் தினத்தை" முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையொட்டி, வேளாண் கல்லுாரி மாணவர்கள், பள்ளியின் பொறுப்பாசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர் திவ்ய பிரியாவுடன் இணைந்து மாணவர்களுக்கு மண் வளம் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், வேளாண் மாணவர்களும், பள்ளி மாணவர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். மேலும், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது வீடுகளில் நட்டு மகிழ காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.