சென்னை : சென்னைவடபழநி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
வடபழநி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6:30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் முருகப் பெருமானுக்கு ராஜ அலங்காரம் நடந்தது. நண்பகல் 12:00 மணிக்கு உச்சிகாலத்தில் வெள்ளிகவசம் சார்த்தப்பட்டது. மாலை 5:00 மணிக்கு செண்பகப்பூ அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர் சன்னிதியில், பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 108 குத்துவிளக்கு ஏற்றப்பட்டன. திரி ஏற்றுவதற்காக பக்தர்களுக்கு நீண்ட குச்சி வழங்கப்பட்டது. அதேபோல, மூலவர் சன்னிதியில், 36 குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டன. பிரஹாரப் பகுதியில், 8,001 மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பொரி உருண்டை பிரசாதம் வழங்கப்பட்டது.