சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாகிறது. 'மாண்டஸ்' எனப்படும் இந்த புயலால், சென்னை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு, மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நேற்று மாலை வலுப்பெற்றது.
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கில், தமிழக கடற்பகுதியை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புயலாகிறது
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறுகிறது.
'மாண்டஸ்' என்ற பெயரிலான இந்த புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, இன்று அறிவிக்கப்படும்.
இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று, வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
வடக்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், நாளை மிக கனமழை பெய்யும்.
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அதி கனமழை
வரும் 9ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், மிக அதிக கனமழை பெய்யும்.
சில இடங்களில், அதி கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், கனமழை பெய்யும்.
வரும், 10ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை; கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோரத்தில், இன்றும், நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். பின், காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, அதிகபட்சம், 80 கி.மீ., வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.
மீனவர்களை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், இலங்கையின் வடக்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு, வரும், இன்று முதல், 10ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றிரவு 9:00 மணி நேர நிலவரப்படி, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, புயல் சின்னம் நிலை கொண்டிருந்தது.
இது, காரைக்காலில் இருந்து, கிழக்கு, தென் கிழக்கே, 970 கி.மீ., துாரத்திலும்; சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே, 1,020 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறுகிறது.