சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க, பா.ஜ., நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜியை, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் நிர்மல்குமார், சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார். மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாகவும், அவ்வாறு அவதுாறாக கருத்து தெரிவிக்க நிர்மல் குமாருக்கு தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
மனுவுக்கு பதில் அளிக்கவும், அவதுாறாக கருத்து தெரிவிக்க தடை விதித்தும், நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
தடையை நீக்கக் கோரி, நிர்மல்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தனிப்பட்ட முறையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, எனக்கு எந்த பகையும் கிடையாது. பொது தளங்களில் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான், குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன' என, தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
அதுவரை, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.