வேலுார் : ''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதல் கட்ட பணிகள் முடிந்த பிறகு தான், அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, அம்பேத்கரின், 66வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியில் அவசரமாக தொடங்கப்பட்டு முடிக்காமல் சென்று விட்டனர். இந்த திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் செய்தது போல இப்போது செய்ய முடியாது.
ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீரை குழாய் மூலம் தான் எடுத்துச்செல்ல வேண்டும். தண்ணீர் செல்லும் இடங்களில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
இப்பணிகளை அப்படியே விட்டு, இத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்றால், இதையெல்லாம் செய்யாமல் ஏன் தொடங்கினீர்கள் என்ற கேள்வி வரும்.
எனவே, முதல் கட்டமாக செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக செய்து முடித்தபின் தான், அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.