வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், விரைவில் ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக அதிநவீன சிக்னல் தொழில்நுட்ப பணி மேற்கொள்ள, 1,620 கோடி ரூபாயில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒன்றரை நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில் இயக்க முடியும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துரிதகதியில் நடக்கிறது. இப்பணிகள் நிறைவடையும் போது, ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
இதற்கு, நவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு மேலாண்மை அமைப்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்த தொழில்நுட்பம் மிக அவசியமாக இருக்கிறது.
பரிசோதனை
பிரத்யேகமாக தயாரிக்கப்பட உள்ள தொலை தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, ஓட்டுனர் இன்றி தானாகவே ரயிலை இயக்க வழிவகுக்கும்.
இந்த பணிகளை மேற்கொள்ள, சமீபத்தில் 'டெண்டர்' வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த பணிகளை 1,620 கோடி ரூபாயில் மேற்கொள்ள, ஹிட்டாச்சி ரயில் எஸ்.டி.எஸ்., - எஸ்.பி.ஏ., மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்.டி.எஸ்., இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, இதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓட்டுனர் இல்லாத ரயிலை இயக்க, சர்வதேச தரத்துடன் கூடிய பாதுகாப்பு அளவீடுகளின் படி சான்றளிக்கப்படும். வெற்றிகரமான சோதனைக்கு பின், ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
இறுதியாக, மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பின், மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

ஒருங்கிணைப்பு
இந்த புது சிக்னல் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும்போது, குறைந்தபட்சம் ஒன்றரை நிமிட இடைவெளியில், தானியங்கி முறையில் ரயில்களை இயக்க முடியும்.
இது மட்டுமல்லாமல், பணிமனைக்குள் ரயில்கள் வந்து செல்வது, நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணியருக்கு தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.