வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வீடு, கல்வி, வாகன கடனுக்கான வட்டி அதிகரிக்கும்.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான பணக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று (டிச.,7) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் துவங்கி, ரிசர்வ் வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியும் அதிகரிக்கும்.