புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமானதாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்க பார்லிமென்ட் வந்த பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இன்று குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல்நாள். இந்த கூட்டத்தொடர் முக்கியமானது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள சந்தர்பத்தில், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கிறது.
உலகளவில் இந்தியா ஒரு இடத்தை பிடித்த விதம், இந்தியா எதிர்பார்ப்புகளை அதிகரித்த விதம் மற்றும் உலகளவில் இந்திய தனது பங்களிப்பை அதிகரித்து வரும் நேரத்தில், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது மிகப்பெரிய வாய்ப்பு. ஜி20 மாநாடு என்பது சாதாரண தூதரக நிகழ்ச்சி அல்ல. இந்தியாவின் திறமையை உலகத்திற்கு முன் எடுத்து காட்ட கிடைத்த பெரியவாய்ப்பு.
பெரிய நாடு, ஜனநாயகத்தின் தாய் போன்ற திறமைகள் உள்ள நாடு இந்தியா. இந்த மாநாடு மூலம் இந்தியாவை பற்றி உலகம் தெரிந்து கொள்ளவும், தனது திறமையை எடுத்து காட்ட இந்தியாவிற்கும் கிடைத்த வாய்ப்பு.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமான முடிவுகள் எடுக்கவும் இந்த கூட்டத்தொடரில் முயற்சி மேற்கொள்ளப்படும்.
அனைத்து கட்சிகளும் விவாதங்களுக்கு மதிப்பு கூட்டும் என்று நம்புகிறேன். இளம் எம்.பி.,க்களின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு விவாதங்களில் பங்கேற்க அனைத்து கட்சிகளும் வாய்ப்பு வழங்க வேண்டும். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமானதாக மாற்ற கூட்டாக அனைத்து கட்சிகளும் முயற்சி எடுக்க வேண்டும்.
துணை ஜனாதிபதி, ராஜ்யசபா தலைவராக தனது பதவிக்காலத்தை துவக்குகிறார். பழங்குடியின பாரம்பரியத்தால், இந்தியாவை பெருமைப்படுத்துவதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பெரும் பங்கு வகித்ததை போல், விவசாயியின் மகன், துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவர் என இந்தியாவை பெருமைப்படுத்துவார். எம்.பி.,க்களை ஊக்குவிப்பார். இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
பொறுப்பேற்பு

துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்ற பிறகு பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கி உள்ளது. துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபா அவை தலைவராக உள்ளார். இன்று அவர் அவை தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

பெரிய பலம்
ராஜ்யசபா துவங்கியதும், ஜக்தீப் தங்கரை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த அவை சார்பாகவும், நாடு சார்பாகவும், அவைத்தலைவரை பாராட்டுகிறேன். வாழ்க்கையில், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த உயரத்தை அடைந்துள்ளீர்கள். இது, நாட்டில் பலருக்கு முன்மாதிரியாக இருக்கும்.

நமது துணை ஜனாதிபதி விவசாயியின் மகன். சைனிக் பள்ளியில் படித்தவர்.இதனால், அவர் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார். நாட்டிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. நாட்டின் பல பிரதமர்கள், இந்த அவையில் உறுப்பினராக பணியாற்றி உள்ளனர்.