மிர்புர்: வங்கதேசம் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று (டிச.,7) மிர்புரில் நடக்கிறது. இதில் ‛டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் லிட்டன் தாஸ் 7, அனமுல் ஹக் 11, நஜ்முல் 21, ஷாகில் அல் ஹசன் 8, ரஹீம் 12 ரன்களுக்கும், அபிக் ஹூசைன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த மக்முதுல்லா மற்றும் ஹசன் மிராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. 165 பந்துகளில் 148 ரன்களை குவித்த நிலையில் மக்முதுல்லா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மிராஜ் அதிரடி காட்டி சதமடித்து அசத்தினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நசும் அகமது 18 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய அணி:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், தீபக் சாகர், முகமது சிராஜ், உம்ரன் மாலிக்