சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை கமிஷனர் காவேரி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று(டிச.,7) காலை காலமானார். அவரது வீடு திருவல்லிக்கேணியில் உள்ளது.
கபாலீஸ்வரர் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரி இவர் ஆவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பதவியில் உள்ளார். சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், நவ., மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மிகவும் நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட காவேரி, ஆக்கிரமிப்பில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் சொத்துகளை அதிரடியாக மீட்டார். இதன் மதிப்பு மட்டும் பல கோடி இருக்கும். பல இடத்தில் இருந்து மிரட்டல் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல், காவேரியே, நேரடியாக சென்று சொத்துகளை மீட்டார். இதனால், அறநிலையத்துறையில் பல எதிர்ப்புகளையும் சந்தித்தவர் ஆவார்.
கோயில் நிர்வாகத்தை தனது பாணியில் செயல்படுத்திய காவேரி, அதிகமான பணிச்சுமைக்கு மத்தியிலும் கோயிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த நேரம் மற்றும் காலத்தை பற்றி நினைவில் வைத்திருந்தார்.