வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை அருகே நாள்தோறும் பல மணி நேரம் மூடப்படும் கேட்டால் சிரமத்திற்கு உள்ளான மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வழியே தினமும் 21 பயணிகள் ரயில்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கத்தில் இணைப்பு பாதை இல்லாத காரணத்தால் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைக்கு மட்டுமே திருவாரூர் மார்க்கத்தில் இருந்து ரயில்கள் வரும். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வந்து பிறகு விழுப்புரம் அல்லது திருச்சி செல்லும் ரயில்கள் சென்டிங் என்ற பெயரில் இன்ஜின் மாற்றுவதற்கும் ரயில் பெட்டிகளை மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகளுக்கு எடுத்துச் செல்லவும் தினமும் ஏழு முறை பாதை மாற்றும் பணி நடைபெறுகிறது. இதற்காக மாப்படுகை என்ற இடத்தில் ரயில்வே கேட் பலமுறை மூடப்படுகிறது. மாப்படுகை ரயில்வே கேட் மயிலாடுதுறை- கும்பகோணம் செல்லும் கல்லணை வழி சாலையின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறைந்தபட்சம் சென்டிங் செய்யும் ரயில் பாதை மாற்றும் பணியை உடனுக்குடன் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று (டிச., 07) திருவாரூரில் இருந்து வந்த ரயில் பாதை மாற்றும் பணிக்காக இன்று காலை ரயில்வே கேட்டை கடந்த போது அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் ரயில் திரும்பிச் செல்லும்போது தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு செல்ல முடியாதபடி நடு வழியிலேயே நின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரயில்வே நிலையம் மேலாளர் சங்கர் குரு மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.