வேலுார்: வேலுார் மாநகராட்சியில் வாடகை, வரி பாக்கி 50 கோடி ரூபாயை வசூலிக்க 240 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலுார் மாநகராட்சிக்கு சொந்தமான 1,850 கடைகள் பல்வேறு பகுதியில் உள்ளன. கடைகளுக்கு குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடகை பாக்கியாக 15 கோடி ரூபாய், சொத்து வரி, குப்பை வரி பாக்கியாக 35 கோடி ரூபாய் என 50 கோடி ரூபாய் நீண்ட நாட்களாக பாக்கியாக உள்ளது. இதை வசூலிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:
பாக்கி வைத்துள்ளவர்கள் கடைகள் சீல் வைக்கப்படும். அதிக வாடகை பாக்கி வைத்துள்ளவர்களில் 100 பேர் பெயர், புகைப்படம் தயாரிக்கப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். மாநகராட்சியில் 5.50 லட்சம் மக்கள் உள்ளனர். வரி பாக்கிகளை வசூலிக்க ஒரு வார்டுக்கு நான்கு பேர் வீதம் 60 வார்டுக்கு 240 பேர் நியமிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று வசூலிக்கப்படும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.