
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கார்த்திகை தீபதிருவிழா இந்த வருடம் மிகக் கோலகலாமாக நடைபெற்றது.

மாலை 6 மணியளவில் கொடி மரத்தருகே 27 நட்சத்திரங்களுக்கும் 5 பஞ்ச மூர்த்திகளுக்குமாக மொத்தம் 32 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அவையாவும் மூலவரான வடபழநி ஆண்டவருக்கு காட்டப்பட்டு சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டது.

பின் அந்த விளக்குகள் யாவும் கோவில் கோபுரங்களில் வைக்கப்பட்டது.கோவிலுக்கு உள்ளே 108 எண்ணெய் விளக்குகளை பக்தர்கள் ஏற்றி ஒளிரச் செய்து மகிழ்ந்தனர்.

அவர்கள் மேலடுக்கு விளக்கை ஏற்றும் போது கீழ் எரியும் விளக்கின் நெருப்பு ஆடையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக நீளமான குச்சியில் பொருத்தப்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டதை பக்தர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டனர்.

அதே போல நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை இனிப்பு உருண்டை பொரி வழங்கப்பட்டது.
கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்கள் கோவில் மூலவர் சன்னதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அகல் மின் விளக்குகள் அலங்காரத்தை வியந்து பார்த்து ரசித்தனர்.
உற்சவரான பழநி ஆண்டவர் தேவியர் சமேதரராய் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்த பின் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை முன் வந்தார் அவரது ஆசிபெற்று கோவில் குருக்கள் சொக்கப்பனையை கொளுத்தினர்.
சொக்கப்பனையின் ஜோதியில் வடபழநி ஆண்டவர் ஜொலி ஜொலித்து மகிழ்ந்தார்.
-எல்.முருகராஜ்