அன்னூர்: அன்னூரில் பா.ஜ., கொடிகளை போலீசார் அகற்றியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டம் அன்னூரில் நடந்தது. இதற்காக அன்னூரில், கோவை ரோட்டில், இரண்டு கி.மீ., தொலைவிற்கும், கரியாம்பாளையம், கணேசபுரம் மற்றும் குன்னத்தூரில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு போலீசார் கொடிகளை அகற்றும்படி கூறினர். பா.ஜ., நிர்வாகிகள் கொடிகளை அகற்ற மாட்டோம் என்று கூறினர். அதிகாலையில் போலீசார் அன்னூரில் நடப்பட்டிருந்த 500 பா.ஜ., கொடிகளை அகற்றினர்.
மேடை அமைக்க உபகரணங்களுடன் வந்த லாரியையும் அந்த ஊழியர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பித்து, அனுமதியும் பெறப்பட்டது. வேண்டுமென்றே பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி நடப்பட்ட கொடிகளில் 500 கொடிகளை போலீசார் அதிகாலையில் அகற்றி உள்ளனர். மேடை அமைக்கவும் அனுமதி தர மறுத்து விட்டனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ., நிச்சயம் சாதனை படைக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.