ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்கு பின், தி.மு.க., அமைச்சரவை முதன்முறையாக வரும் 14ம் தேதி மாற்றப்படலாம் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், அவரது மகன் உதயநிதிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், மூன்று 'தலை'களுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி அமைந்து, 18 மாதங்களாக அமைச்சர்கள் யாரும் நீக்கப்படவில்லை; 33 அமைச்சர்களும் நீடிக்கின்றனர். இடையில், இரு அமைச்சர்களுக்கு இடையிலான இலாகா மாற்றம் மட்டுமே நடந்தது. அமைச்சர்கள் செயல்பாடுகளில் குறைகளும், புகார்களும் வந்தாலும் கூட, இரண்டு ஆண்டுகள் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றே முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.
தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்ய, அவர் முன்வந்துள்ளார். தன் மகனும், கட்சியின் இளைஞரணி செயலருமான உதயநிதிக்கு, அமைச்சரவையில் இடம் தர முடிவு செய்துள்ள முதல்வர், அதற்கு ஏற்ப அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிகாரிகள் மற்றும் கட்சியினரின் புகார்களுக்கு ஆளாகிய மூன்று அமைச்சர்களுக்கு, கல்தா கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது; மேலும், இருவரின் கூடுதல் இலாகாக்கள் பறிக்கப்பட உள்ளன.
ஆளுங்கட்சியின் அடுத்த வாரிசாக உருவெடுத்துள்ள உதயநிதியின் பிறந்த நாளை, சமீபத்தில் அக்கட்சியினர் வழக்கத்தை விட பெரிய அளவில் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து, அவருக்கு பிறந்த நாள் பரிசாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
செயலாக்கத் துறை
அநேகமாக வரும் 14ம் தேதி, இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வசம், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், இத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது, இலவச திட்டங்கள் அனைத்தையும் இந்த துறையே கவனிக்கிறது. அந்த துறையுடன் சேர்த்து, முதல்வர் வசம் உள்ள வேறு சில துறைகளையும் சேர்த்து, புதிய துறை உருவாக்கப் பட்டு, அதற்கு உதயநிதி பொறுப்பு ஏற்கலாம் என தெரிகிறது. இந்த துறை வழங்குவதன் வாயிலாக, பல அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வாய்ப்பும் உதயநிதிக்கு கிடைக்கும். மக்களுடன் தொடர்புள்ள துறைகள் அனைத்திற்கும் இதில் தொடர்பு இருப்பதால், உதயநிதிக்கு நிர்வாகத் திறமையை சுலபமாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பும் கிடைக்கும் என ஸ்டாலின் கருதுகிறார்.
கருத்து வேறுபாடு
இதற்கிடையில், கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர், அமைச்சரவை பதவியேற்றதில் இருந்து அதிருப்தியில் இருக்கிறார். இப்போதைய மாற்றத்தில், அந்த சீனியர் மந்திரிக்கு முக்கியத்துவம் தரப்படலாம். மற்றொரு துறை அமைச்சருக்கும், செயலருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியுள்ளது. முதல்வர் கவனத்திற்கு, அந்த அதிகாரி கொண்டு சென்றதும், அமைச்சருக்கு 'அர்ச்சனை' நடந்திருக்கிறது. அதனால் அந்த அமைச்சர், முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்படலாம்.
மேலும், 'டெண்டர்' விவகாரத்தில் சிக்கிய அமைச்சர், அரசு செலவில் குடும்பத்துடன் ஊர் சுற்றும் அமைச்சர் என, இருவர் பெயரும் கல்தா பட்டியலில் இருப்பதாக தகவல்.
அதோடு, அமலாக்கத் துறை வலையில் மாட்டி தவிக்கும் அமைச்சர், அந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரை காத்திருக்காமல், இப்போதே அவரை மாற்றி விட்டால், சட்ட நெருக்கடியை தவிர்த்து விடலாம் என கணக்கு போடப்படுகிறது.
முதன்முறையாக அமைச்சராகி உள்ள சிலரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என, முதல்வருக்கு தகவல்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் மாற்றப்பட்டு, உதயநிதிக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவைக்குள் நுழைய அதிக வாய்ப்பை இந்த மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.அங்கீகரிக்கப்பட்ட முழு எண்ணிக்கையில் தற்போதைய அமைச்சரவை இருப்பதால், புதிதாக யாரை சேர்ப்பதாக இருந்தாலும், யாராவது ஒருவரை நீக்கம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், உதயநிதி வருகையால், யார் யார் வெளியேறப் போகின்றனர் என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரத்திலும், அரசு மட்டத்திலும் எழுந்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.