வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-ஐந்து மாவட்டங்களில், 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை, வேளாண் துறை அறிமுகம் செய்து உள்ளது.
![]()
|
வேளாண் துறை சார்பில், 15.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பல்வேறு கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்கு இலவசம்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், ஒரு ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு, தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம், 19.16 லட்சம் தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, இரண்டு பயனாளிகளுக்கு, தென்னங்கன்றுகளை முதல்வர் வழங்கினார்.
நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த, இரண்டு விவசாயிகளுக்கு, பயறு விதைகள் வழங்கப்பட்டன.
சிறப்பு ஊக்கத் தொகை
மேலும், ௧.21 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.
வேளாண் துறை சார்பில், கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில், நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று, பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்ய, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 20 நடமாடும் காய்கனி அங்காடிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
![]()
|
அவற்றை, முதல்வர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், மஸ்தான், தலைமைச் செயலர் இறையன்பு, சர்க்கரைத் துறை கமிஷனர் விஜயராஜ், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி பங்கேற்றனர்.