வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''நாட்டிலேயே முதன் முறையாக, 23 அரசு மருத்துவ கல்லுாரிகளில், அவசர மருத்துவத்துக்கான பட்ட மேற்படிப்பு துவங்கப்பட்டு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
![]()
|
அனுமதி
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவம் என்ற எம்.டி., படிப்பை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:
நாட்டிலேயே முதன்முறையாக, அவசர மருத்துவத்துக்கான பிரத்யேக துறை, தமிழகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அவசர மருத்துவத்தில், மருத்துவ பட்ட மேற்படிப்பு என்ற புதிய பாடப்பிரிவு துவங்கப்படுகிறது. இதுவரை, 85 இடங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்து உள்ளது.
இதில், மத்திய, மாநில அரசுகள் தலா, 50 சதவீத இடங்களை நிரப்புகின்றன.
இந்த பாடப்பிரிவு தமிழகத்தில், 23 மருத்துவ கல்லுாரிகளில் துவங்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில், அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் துவங்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த முதுநிலை பட்டப் படிப்பு உருவாக்க, பல்வேறு இணை துறைகளை மேம்படுத்துவது அவசியம்.
இதற்காக, 21 தலைக் காயத்திற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள், ஐந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர்கள், ஆறு வாஸ்குலார் அறுவை சிகிச்சை டாக்டர்கள், 10 இதய அறுவை சிகிச்சை டாக்டர்கள், 49 மயக்கவியல் டாக்டர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு, நிரப்பப்பட்டு உள்ளது.
இந்த முயற்சி, மத்திய அரசால் பாரட்டப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தில் இந்தியா முழுதும் இளங்கலை மருத்துவம் படிப்பவர்களுக்கு, இந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்பட உள்ளது.
![]()
|
அறுவை சிகிச்சை
கடந்த மாதம், 29ம் தேதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை என்ற எம்.சி.ஹெச்., புதிய பட்ட மேற்படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.
உலக வங்கியின் உதவியுடன், 100 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி, தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும், துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.