மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம்:
நான் தான், அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்துகிறேன். இடைக்கால பொதுச் செயலராக, பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை, தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை; 'இடைக்கால பொதுச்செயலர்' என, பழனிசாமியை இனி குறிப்பிடக்கூடாது.
இவர், அ.தி.மு.க.,வை வழி நடத்துறது இருக்கட்டும்... இவங்க ரெண்டு பேரில், பா.ஜ., யாரை வழி நடத்த போகுது என்பது தானே கேள்வியே!
தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஷெல்வி தாமோதர் பேட்டி:
தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில், 'தமிழக உரையாடல்கள் - 2022' கருத்தரங்கம், வரும், 9ல் 'தமிழகம் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்' என்ற கருப்பொருளில் நடக்க உள்ளது. இதில், நம் மாநிலம், மக்கள், கலாசாரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்வுகளை பற்றிய அறிவார்ந்த உரையாடல்கள், ஒரே மேடையில் நடக்கும். இந்நிகழ்ச்சி, தமிழகத்தின் பெருமைமிக்க வரலாறு, நிகழ்கால மற்றும் எதிர்கால நகர்வுகளை ஒன்றிணைக்கும் புள்ளியாக திகழும்.
தி.மு.க.,வை டென்ஷனாக்க, பா.ஜ.,வின் எல்லா பிரிவும் இப்படி வரிந்து கட்டி வேலை பார்க்கிறாங்களே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

அம்பேத்கர் பன்முகம் உடைய ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு ஜாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்தி வருகிறார், திருமாவளவன். இரு ஆண்டு களாக, அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பா.ஜ.,வினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் செயலில், வி.சி., கட்சி யினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மொழி, ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, பா.ஜ.,வினர் தமிழை சிறப்பித்தாலும், அம்பேத்கரை கவுரவித்தாலும் பற்றி எரியத்தானே செய்யும்!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் பொன்னுசாமி அறிக்கை:
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போது மாதம், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதே திட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது நியாயமல்ல.
உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் சொன்னாரே... தம்பி உதயநிதிக்கு, 'நம்மவர்' கமல், ஒரு போன் போட்டு இந்த பிரச்னையை பேசியிருக்கலாமே!