பேசும் திறனை இழந்தவர்களுக்கு, பிறருடன் தகவல் பரிமாற சில வழிகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் புதிது, முகத் தசை அசைவு உணரிகள் மூலம் எதிரே இருப்பவருடன் பேசுவது. சீனாவிலுள்ள, சிங்குவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த தொழிலநுட்பத்தை வெற்றிகரமாக சோதித்து உள்ளனர்.
உதட்டைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் தாடை மீது பொருத்தக்கூடிய ஒரு பட்டையை சிங்குவா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். . இந்தப்பட்டையில் கார்பன் நேனோ இழைகள் குறுக்கும் நெடுக்குமாக இருக்கின்றன. இந்த இழைகள் மின்சாரத்தைக் கடத்துபவை. இவற்றின் அசைவை, பேச்சாக மாற்றித்தர ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளையும் விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.
குரலற்ற ஒருவர், சிங்குவா உணரியை அணிந்து வாயசைத்துப் பேசுவது போல பாவனை செய்தால், அவரது முகத் தசை, தாடை அசைவுகளை உணரிகள் உணர்ந்து செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு அனுப்ப, அங்கே அது ஒரு குரலாக மாற்றப்பட்டு, அவர் சொன்னதை பேசிக் காட்டுகிறது.
குரல் தசைகளில் புற்று நோய் வந்து, பேச்சிழந்த ஒருவருக்கு, இந்த கண்டுபிடிப்பு, மீண்டும் பேசும் திறனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.