வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் பிரசாரம் செய்த குஜராத்தில் படுதோல்வியையும், பிரசாரத்திற்கு போகாத ஹிமாச்சலில் வெற்றிக்கனியையும் சுவைத்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஹிமாச்சலில் இழுபறி நிலை ஏற்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கின்றது.
இத்தனைக்கும் அம்மாநிலத்தில் ராகுல் தேர்தல் பிரசாரமே செய்யவில்லை. அவரது சகோதரி பிரியங்கா மட்டும் சில இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அம்மாநில பா.ஜ., தலைவர்கள் தோற்றுவிடுவோம் என பயந்துதான் பிரசாரத்திற்கு ராகுல் வரவில்லை என்று விமர்சனம் செய்தனர். ராகுலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பாத யாத்திரையில் மும்முரமாக இருந்தார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள், காங்.,க்கு சாதகமாக இருப்பதால் காங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் தேவையில்லையோ என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் நேரில் முகம் காட்டினால் தான் காங்கிரசுக்கு ஓட்டு விழும் என்ற கருத்தையும் மாற்றி உள்ளது.
ஹிமாச்சல் நிலைமை இப்படியிருக்க, குஜராத்தில் மட்டும் இரண்டு நாட்கள் ராகுல் பிரசாரம் செய்தார். ஆனால் அங்கு காங்., படுதோல்வியை சந்தித்துள்ளது.

முகம் காட்டிய குஜராத்தில் முகவரியை தொலைத்தாலும், முகம் காட்டாத ஹிமாச்சலில் முகவரியை பெற்றதும் ராகுலுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் எதிர்காலத்தில் தனது தேர்தல் பிரசார உத்திகளை ராகுல் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.