வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிப்பெற்று தொடர்ந்து 7வது முறையாக ஆட்சி அமைக்கிறது பா.ஜ., இதன்மூலம் மேற்குவங்கத்தில் தொடர்ச்சியாக 7வது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்ற இடதுசாரிகளின் சாதனையை பா.ஜ., சமன் செய்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,8) நடக்கிறது. இதில் எண்ணிக்கை துவங்கியதில் இருந்து பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ., 154 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பெரும்பான்மைக்கு 92 இடங்களே தேவைப்படும் நிலையில் அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது. இதனையடுத்து அங்கு பா.ஜ., தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடிக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து 7 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி என்ற சாதனையை சமன் செய்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. முன்னதாக மேற்குவங்கத்தில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சுமார் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்றது. இந்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக 7 சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர்.
குஜராத்தில் 1998ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ., தற்போது தொடர்ச்சியாக 7வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் நிகழ்த்திய சாதனையை சமன் செய்துள்ளது.