சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், தற்போதைய நிலவரப்படி புயலாக கரையை கடக்க கூடும். இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், தற்போதைய நிலவரப்படி புயலாக கரையை கடக்க கூடும். சென்னையிலிருந்து தென்கிழக்கு 550 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி ஸ்ரீ ஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்க கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று(டிச.,08) மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை(டிச.,09) காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோர பகுதிகளில் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும். டிச., 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தமிழகத்தில் அநேக இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
விடுமுறை அறிவிப்பு: புயல் காரணமாக, சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.