ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மாடகொட்டான் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் பழைய நிலம் உள்ளது. இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர், அந்த நிலங்களின் ஆவணங்களை கைப்பற்றி, தனது பெயருக்கு பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக தகராறு நடந்து வந்த நிலையில் தமிழரசனை கொல்ல திட்டமிட்டு அவருடைய உறவினரான மாதவ மகேஷ், கூலிப்படையை சேர்ந்த செல்வம், சீனிவாசன், பால யோகேஷ், விஜயகுமார், முத்துராஜ், கோபி உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பட்டனங்கத்தான் இசிஆர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழரசனை மடக்கி பிடித்து பட்டப் பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணை ஆனது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (டிச.,8) முதல் குற்றவாளியான மாதவன் மகேஷ், இரண்டாம் குற்றவாளியான செல்வம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும், மற்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டார்.