வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். ஆனாலும், குஜராத் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு தொடர்ந்து 7வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க இருக்கிறது.
அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் 12ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவைப்படும் நிலையில், கூடுதல் இடங்களில் முன்னிலையில் இருப்பதால் காங்., அங்கு ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்த தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கினர். சிலர் வெற்றியையும், சிலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர். குஜராத் பா.ஜ., முதல்வர் பூபேந்திர படேல் தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில் 2,13,530 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் ஹிமாச்சலப்பிரதேசத்தில் செரஜ் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் 53,562 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு 84,336 ஓட்டுகளுடன் வென்றார்.
மற்ற பிரபல வேட்பாளர்கள் நிலவரம்:

* குஜராத்தின் கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி 18,745 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
* காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ஹர்திக் படேல் குஜராத்தின் விரம்கம் தொகுதியில் போட்டியிட்டு ஆம்ஆத்மி வேட்பாளரை விட சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
* மோர்பி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் காந்திலால் அம்ருடியா, 59 சதவீதத்திற்கு மேலான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

* வட்கம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி, 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்தார்.
* கதர்காம் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட கோபால் இடாலியா தோல்வியடைந்தார்.