வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி, பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி கட்சி தற்போதைய குஜராத் தேர்தலில் 12 சதவீதத்திற்கும் மேல் ஓட்டு பெற்றுள்ளது. ஏற்கனவே கோவா சட்டசபை தேர்தலிலும் அக்கட்சி 6.8 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்ததால், தற்போது ஆம்ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த லோக்சபா இடங்களில் 2 சதவீதம் அதாவது 11 இடங்களும், குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டசபை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத ஓட்டுகளை பெறுவதோடு, 4 லோக்சபா தொகுதிகளிலும் வென்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி என 8 கட்சிகள் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டில்லி, பஞ்சாபில் ஆட்சி செய்துவரும் ஆம்ஆத்மி கட்சி, கடந்த பிப்ரவரியில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் 6.8 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. தற்போது நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 12.89 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளது.
இதன் மூலம் டில்லி, பஞ்சாப், கோவா, குஜராத் என நான்கு வெவ்வேறு சட்டசபை தேர்தலில் 6 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றது. லோக்சபாவில் அக்கட்சி சார்பில் 4 பேர் வெற்றிப்பெற்றுள்ளனர். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சியும் தேசிய கட்சி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‛இன்று குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் ஆம்ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்சியாக இருந்த ஆம்ஆத்மி, தற்போது 2 மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததுடன், தேசிய கட்சியாக மாறியுள்ளது' என்றார்.