செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் - மறைமலை நகர் ரயில்வே பாதை அருகில், ஆண், பெண் என, இருவர் ரயிலில் அடிபட்டு, இறந்து கிடந்தனர்.
தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரரான அலெக்ஸ், 24, என்பவரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஷெர்லின், 20, என்பவரும், மறைமலை நகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இருவரும் கடந்த எட்டு மாதமாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி இரவு நேரங்களில், ரயில்வே பாதையையொட்டி கடந்து செல்லும் பாதையில் அமர்ந்து பேசுவது வழக்கம்.
இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் - மறைமலை நகர் ரயில்வே பாதையில் பேசிக்கொண்டிருந்த இவர்கள், ரயில் சென்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபட்டு இறந்தனர் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்தனரா அல்லது விபத்தா என விசாரித்து வருகின்றனர்.