ரஷ்யா வழங்கிய தள்ளுபடி கச்சா எண்ணெயை வாங்கியதால் இந்தியா சுமார் ரூ.35,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய எண்ணெயால் இந்தியா டாலரையும் வெளியே செல்லாமல் மிச்சப்படுத்தியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயராமல் தடுக்கப்பட்டது.
கடந்த 2021 இறுதியில் இருந்தே உலகளவில் விலைவாசி பிரச்னை எழுந்தது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுத்தது. அப்போதிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காண துவங்கியது. இதற்கிடையே பிப்ரவரியில் ரஷ்யா தனது படைகளை அண்டை நாடான உக்ரைனுக்குள் அனுப்பி போரை தொடங்கியது. தனது இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் படி நேட்டோ படையில் உக்ரைன் இணைய இருந்ததை எதிர்த்து இந்த கலகத்தை செய்தார் ரஷ்ய அதிபர் புடின். இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஐரோப்பா விதிக்கத் தொடங்கின. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா இதனால் பாதிப்படைந்தது. ரஷ்ய எண்ணெய் வரத்து தடுக்கப்பட்டதால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலர் வரை சென்றது.
![]()
|
மே மாதம், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா பேரல் ஒன்றுக்கு 16 டாலர் தள்ளுபடியில் வாங்கியது. இருப்பினும் படிப்படியாக தள்ளுபடி குறைந்தது. ஜூன் மாதத்தில் பேரல் ஒன்றிற்கு 14 டாலர் ஆகவும், ஜூலையில் 12 டாலராகவும் ஆகவும், ஆகஸ்டில் 6 டாலராகவும் தள்ளுபடி குறைந்தது. கடந்த நிதியாண்டில் இந்தியா 2% அளவிற்கு மட்டுமே ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது. ஆனால் 2023 நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த 2 கோடி டன் எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. அதில் 16%, அதாவது 32 லட்சம் டன் ரஷ்ய எண்ணெய் ஆகும்.
விலை வரம்பு நிர்ணயம்
ரஷ்யா அளவுக்கு அதிகமாக தள்ளுபடி வழங்குவதாக கருதிய ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஜி7 கூட்டத்தை கூட்டி கடந்த டிச., 5 அன்று பேரல் ஒன்றை 60 டாலருக்கு கீழ் விற்கக் கூடாது என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சரக்கு கப்பல் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ரஷ்யா எண்ணெய் விற்றால் மட்டுமே சரக்குகளை கையாள முடியும். உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஜி7 நாடுகளில் இருப்பதால், இந்த முடிவு ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்கலாம்.
Advertisement