சென்னை :சென்னையில் 'மாண்டஸ்' புயலால் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மேலும், அவசர உதவிக்கான தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மேலும், சென்னையில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மழைநீர் வடிகாலில் வண்டல் வடிகட்டி தொட்டியில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய, துாய்மை பணியாளர்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
தயார்
சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:
புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற, 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் தங்குவதற்காக, 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 80 கி.மீ., வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால், காற்றின் வேகத்தின் காரணமாக விழக்கூடிய மரங்களை அகற்ற, 272 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாகனங்களில் பொருத்தப்பட்ட இரண்டு மர அறுவை இயந்திரங்கள், ஆறு 'ஹைட்ராலிக்' மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு 'பொக்லைன்' வாகனம், 115 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகில் நிற்பதையோ, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
6ம் எண் எச்சரிக்கை கூண்டு
புயல் சின்னம் காரணமாக காசிமேடு, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் மற்றும் எண்ணுாரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், படகுகள் மற்றும் வலைகளை பத்திரப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
மேலும் எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாகவும், அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற வேண்டுமென்றும், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு தீவிரம்
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, மண்டலத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில், 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், அந்தந்த மண்டலங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபடவும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை என பலதுறைகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளோம்.துறைமுகம் அருகில் மற்றும் கடற்கரை ஓரங்களில் சரக்கு ஏற்றாத கன்டெய்னர் லாரிகள் நின்றிருந்தால், அவற்றை உடனே அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்ற உதவி எண், 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரே நேரத்தில் 50 புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுஉள்ளது. ஒவ்வொரு வார்டிலும், அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனே சென்று, நிவாரண உதவி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு வார்டிற்கும், ஒரு சிறிய இலகு ரக வாகனத்துடன், 10 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். இந்த வாகனத்தில் ஜல்லி, தார் கலவை உள்ளிட்டவை இருக்கும். தேவைப்படும் பகுதிகளில், இந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
- மகேஷ்குமார், துணை மேயர், சென்னை மாநகராட்சி
602 'பேனர்' அகற்றம்
தாம்பரம்: 'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாம்பரம் மாநகராட்சி பகுதியில், கட்டடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றுமாறு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
அதன்படி, நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில், 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர், ஜி.எஸ்.டி., சாலை, வேளச்சேரி, முடிச்சூர் சாலைகள், அகரம் மெயின் ரோடு, ராஜாஜி, கக்கன், காந்தி, கிஷ்கிந்தா, ரேடியல், திருநீர்மலை சாலைகள், பம்மல் மெயின் ரோடு என, முக்கிய சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த, 42 ராட்சத 'பேனர்'கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, 240 பிளக்ஸ் பேனர்கள், 320 விளம்பர தட்டிகள் என, மொத்தம் 602 பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
1913; 044 - 2561 9206; 2561 9207; 2561 9208வாட்ஸ் ஆப் எண்: 94454 77205